கரைச்சிப் பிரதேச சபைக்குத் தகுதியான தலைமை வேண்டும் - சந்திரகுமார்

கிளிநொச்சி, பரந்தன் நகர்களை உள்ளடக்கிய கரைச்சிப் பிரதேச சபைக்குத் தகுதியான தலைமை வேண்டும். கட்சி நலன், அரசியல் நலன்களுக்கு அப்பால், மக்களின் நலனையும் பிரதேச வளமாக்கலையும் கவனத்தில் கொண்டு செயலாற்றக் கூடிய தலைமையையே தெரிவு செய்ய வேண்டும் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அந்த அமைப்பின் ஸ்தாபகர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கரைச்சிப் பிரதேச சபையானது, கரைச்சி, கண்டாவளை ஆகிய இரண்டு பிரதேச செயலர் பிரிவுகளையும் மேற்கே வன்னேரிக்குளத்திலிருந்து கிழக்கே குமாரசாமிபுரம் வரையிலான பெரும்பிரதேசத்தை உள்ளடக்கியது. அத்துடன், கிளிநொச்சி, பரந்தன் உள்ளிட்ட இரண்டு நகர்களையும் வட்டக்கச்சி, உருத்திரபுரம், ஸ்கந்தபுரம் – அக்கராயன், இரணைமடு, தருமபுரம் ஆகிய முக்கியமான பிரதேச மையங்களையும் கொண்டுள்ளது. முக்கியமாக கிளிநொச்சி நகர அபிவிருத்திக்கும் மாவட்ட அடையாளத்துக்குமான பிரதேச சபையாகவும் கரைச்சிப்பிரதேச சபையே உள்ளது. எனவே இந்தப் பெரும் பிரதேசத்தை ஆளுகை செய்யக் கூடிய ஆற்றலும் வினைத்திறனும் உடைய தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.
நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலின் முடிவுகள் கரைச்சிப் பிரதேச சபையில் எந்தத் தரப்பும் ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. இதனால் எந்தத் தரப்பினர் ஆட்சியை அமைப்பது என்ற குழப்பமான நிலையே நீடிக்கிறது. இருந்தாலும் மக்கள் நலனை முதன்மைப்படுத்திச் செயற்படும் தேவையும் கடப்பாடும் அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளது. ஆகவே, வினைத்திறனும் ஆற்றலுமுடைய, மக்களால் மதிக்கப்படுகின்ற ஒருவரையே தலைவராகத் தெரிவு செய்ய வேண்டும். போரினால் முற்றாகவே அழிவடைந்த கிளிநொச்சியையும் சுற்றயல் பிரதேசங்களையும் மீளக் கட்டியெழுப்புவற்கான கூட்டிணைந்த செயற்பாட்டை முன்னெடுக்கக் கூடிய தலைமைத்துவப் பண்புடையவராக அவர் இருக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வை உருவாக்கக்கூடியவாறு செயற்படுபவராகவும் இருக்க வேணும். மேலும் அனைத்துத் தரப்பினரையும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அரவணைத்துச் செயற்படக்கூடியவராகவும் ஜனநாயக விழுமியங்களைப் பேணக்கூடியவராகவும் இருக்க வேண்டும். எனவேதான் கரைச்சிப் பிரதேச சபையில் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டோரிடத்திலும் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளிடத்திலும் நாம் இந்த நியாயமான கோரிக்கையை முன்வைக்கிறோம்.

இவ்வாறு நிகழாமல் கட்சி நலன், அரசியல் நலன் என்று தமது நலன்களை முதன்மைப்படுத்தித் தீர்மானங்களை எடுத்துத் தலைமைக்கான தெரிவு நடக்குமாக இருந்தால், அது மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகவே அமையும் என்பதுடன் அதனை நாம் எதிர்க்க வேண்டிய நிலையும் ஏற்படும். இவ்வாறான நிலை ஏற்பட்டால், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பேணி, மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளின் பக்கமாகவே நாம் நின்று செயற்படுவோம். இந்தச் சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் வளர்ச்சியிலும் நலனிலும் அக்கறையுள்ளவர்கள் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் முன்வந்து, கரைச்சிப் பிரதேச சபையை திறனாக ஆளுகை செய்யக்கூடிய தலைமையைத் தெரிவு செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்” என்று சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது.

No comments