இன ரீதியாகப் பிழைகளை திருத்த முடியாத சிங்கள சமூகம்!

பிரதமர் பற்றிய நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏப்ரல் 4ந் திகதி எடுக்கப்பட இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் இவ்வாறான சந்தர்ப்பங்கள் எழும் போது நாங்கள் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியையும் நான் கவனித்துள்ளேன். அவற்றின் தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில்த் தான் இவ்வாறான விடயங்களைக் கையாளுகின்றார்கள். 


மக்களைக் கேட்பதில்லை. இரணிலுக்கு எதிரான ஐ.தே.க உறுப்பினர்கள் தற்போது அவருடன் திரும்பவும் ஒன்று சேர ஒத்துக் கொண்டுள்ளார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ நன்மைகள் இணங்கப்பட்டுள்ளது என்று தானே அர்த்தம்! இந்தக் கொடுப்பனவுகள் தனிப்பட்டவாறான நன்மையா அல்லது மக்கள் சார்பான கோரிக்கைகளுக்கு ஈந்த கொடுப்பனவுகளா என்பது பற்றி வெளிப்படைத் தன்மை இருப்பதில்லை. 
இவ்வாறான சந்தர்ப்பங்கள் வருவது அபூர்வம். அவற்றை தவற விடக் கூடாது. ஏன் என்றால் எந்த ஒரு சிங்களக் கட்சியும் தமிழ் மக்களுக்கு அவர்களின் நியாயமான உரித்துக்களை வழங்குவதற்கு பின்நின்றே தீரும். சிங்களத் தலைவர்கள் தம் மக்களிடம் தமிழ் மக்கள் சம்பந்தமாகக் கொண்டு சென்ற பிழையான, தவறான, தாறுமாறான கருத்துக்கள் அம் மக்களை இப்பொழுதுஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இன ரீதியாகப் பிழைகளைச் செய்து விட்டு இப்பொழுது அவற்றைச் சரிசெய்ய விளைந்தால் சிங்கள மக்கள் தங்கள் தலைவர்களின் தலையைக் கூடக் கொய்து விடுவார்கள் என்ற பயம் தலைவர்களுக்கு இருக்கின்றது. இந்தப் பயத்தின் காரணமாகவே தமிழர்களுக்குத் “தருவோம் தருவோம்” என்று கூறி விட்டு சிங்களத் தலைவர்கள் தராது இருக்கின்றார்கள். சில தடவைகளில் சில சிங்களத் தலைமைகளின் உள்ளார்ந்த எண்ணமே தமிழ் மக்களை எழும்ப விடக் கூடாது என்பது. ஆகவே தான் வௌ;வேறு சூழல்ப் பிரச்சினைகளை எடுத்துக் காட்டி எமக்கு நன்மைகள் எதையுந் தராது ஏமாற்றி வருகின்றார்கள் சிங்களத் தலைவர்கள். சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படவில்லை. உள்ளூர் அகதிகள் வாழ்க்கை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் கைவாங்கப்படவில்லை. படையினர் தொகை குறைக்கப்படவில்லை. இவ்வாறான கொடுக்கக் கூடாதென்ற மனோ நிலையில் இருந்து விடுபட்டு தமிழர்களுக்கு உதவ அவர்கள் முன்வருவதென்றால் அவர்களின் அரசியல் வாழ்க்கைக்குப் பங்கம் ஏற்படும் சந்தர்ப்பங்கள் வரவேண்டும். அரசியல்வாதிகளுக்கு கொள்கைகளிலும் பார்க்கச் சுயநலமே முக்கியம். எமது தலைவர்களுக்கும் சுயநலமே இதுகாறும் முக்கியமாகத் தெரிந்து வந்துள்ளது.
சுயநலப் பாதிப்பு என்று வந்தவுடன் சிங்கள மக்களைத் தமக்கு வேண்டியவாறு மனம் மாற்ற சிங்கள அரசியல்வாதிகள்முன் வருவார்கள். இப்பொழுது அவ்வாறானதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. 


சென்ற 2015 தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் கூட மகிந்தவுடன் சேர்ந்திருந்த ஒரு சிறுபான்மைத் தலைவர் திடீர் என்று இரணிலுடன் ஒரு ஒப்பந்தம் வைத்துக் கொண்டார். “நான் உங்களை ஆதரிப்பேன். எனக்கு இந்த அமைச்சு தரவேண்டும்” என்று. மேலும் பல கோரிக்கைகளையும் முன் வைத்தார். இரணிலின் நெருக்கடியான நேரத்தில் அவர் அதற்கு ஒப்புக் கொண்டேயாக வேண்டியிருந்தது. ஒப்புக்கொண்டார். பின்னர் அந் நபருக்கு அவர் கேட்ட குறிப்பிட்ட அந்த அமைச்சுப் பதவி கிடைத்தது. அவருக்குக் கொடுக்க வேண்டாம் என்று எம்மவர் இரணிலிடம் கூறிய போது நடந்ததை எமக்குக் கூறினார் இரணில். தான் வாக்குக் கொடுத்து விட்டதாகக் கூறினார்.ஆகவே பெரும்பான்மை அரசியல் தலைவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் தான் இன்றைய அரசியல் அரங்கத்தில் சிறுபான்மையினருக்குக் கிடைக்கும் வரப்பிரசாதம். அதனை உரியவாறு பாவிக்க நாம் முன்வர வேண்டும். 


ஆனால் தனியொருவரோ இருவரோ இந்த ஒப்பந்தங்களை தமிழ் மக்கள் சார்பில் ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு அவர்கள் ஏற்படுத்த முன் தமிழ்ப் பொது மக்களின் கருத்துக்கள் கண்டறியப்பட வேண்டும். நாம் எடுக்கும் தீர்மானங்களுக்கு தகுந்த காரணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க எமக்குத் திராணி இருக்க வேண்டும். ஓரிருவர் தமக்குள் குசு குசுத்து விட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாது. யார்சார்பில் நாங்கள் நடந்து கொண்டாலும் எழுத்து மூல உடன்பாடு ஒன்று இருக்க வேண்டும். அதன் பின்னரே எமது ஆதரவு வழங்கப்பட வேண்டும். அதற்கு மறுப்புத் தெரிவிப்போர் எவ்வாறு தமது காரியத்தைச் சாதித்துக் கொண்டதும் எமக்கு சார்பாக நடக்கப்போகின்றார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 


இரணிலின் நம்பிக்கையில்லாப் பிரேரணை எவ்வாறு செல்லும் என்று ஓரளவுக்கு அனைவருக்குந் தெரியும். அதனால்த்தான் அந்தப் பிரேரணையில் மகிந்த அவர்கள் கையெழுத்திடவில்லை. அவருக்குத் தோற்கவிருப்பமில்லை. எனினும் நாங்கள் வந்த சந்தர்ப்பத்தைக் கைவிடக் கூடாது. 
சிறிய சிறிய நன்மைகள் பலவற்றையும் தமிழ் மக்கள் தற்போதைக்கு எதிர்பார்த்து நிற்கின்றார்கள். அவற்றையேனும் பெற்றுக் கொடுக்க இது நல்லதொரு வாய்ப்பு. 
நேற்று கௌரவ மங்கள சமரவீரவை சந்தித்த போது தமிழ் மக்கள் பிரச்சினைத் தீர்வு தடைபட்டுப் போகும் நிலையே இப்போது இருப்பதாகக் கூறினார். உடனே நான் “அப்படியானால் இரண்டு சிறிய விடயங்களை நீங்கள் செய்யுங்கள்; அது எமக்கு ஓரளவேனுந் தென்பை ஏற்படுத்தும்” என்றேன். “என்ன?” என்று கேட்டார். ஒன்று மகாவலி அதிகாரசபைச் சட்டத்தை கைவாங்குமாறு கேட்டேன். மற்றது 1992ம் ஆண்டின் 58ம் இலக்கச் சட்டத்தைக் கைவாங்கக் கோரினேன். 


முன்னையது 1987ம் ஆண்டில் வந்த 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரப்பரவல் நிலையைக் கணக்கில் எடுக்காது தான்தோன்றித் தனமாக வடமாகாணத்தில் மகாவலி அதிகாரசபை தனது நடவடிக்கைகளை எடுத்துச் செல்ல இடமளித்துள்ளது.“எல்” வலயத்தில் வெளி மாகாண மக்களைக் கொண்டு வந்துகுடியமர்த்தியது அச்சபையே. தொடர்ந்து பல குடியமர்த்தல்களுக்கு இன்றும் அத்திவாரம் போடப்பட்டு வருகின்றது. அரசாங்கத்திற்கு மேலான அதிகாரத்தை அச் சபை பிரயோகிக்க முடியுமாக இருக்கின்றது. ஆகவே அச்சட்டம் கைவாங்கப்பட வேண்டும். பின்னர் வேண்டுமெனில் 13வது திருத்தச் சட்டக் கோட்பாடுகளுக்கு அமைய புதிய சட்டம் வரையப்படலாம் என்றேன். 


1992ம் ஆண்டின் 58ம் இலக்க சட்டமே அரசாங்க அதிபர்களை மாவட்ட செயலாளர்கள் ஆக்கி மாகாண சபைகளின் மேற்பார்வையின் கீழிருந்து மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் அவர்களைக் கொண்டு வந்தது. இதனால் மாகாணந் தோறும் இரு சமாந்திர அதிகார மையங்கள் நடைமுறையில் இருந்து வர இச்சட்டம் இடமளித்துள்ளது. அச் சட்டத்தைக் கைவாங்கினால் மீண்டும் 1987ல் எதிர்பார்த்தவாறு 13வது திருத்தச் சட்டம் சீர்செய்யப்பட்டுவிடும். இது நிரந்தர அரசியல் தீர்வல்ல. தற்காலிகமாக தமிழ் மக்களுக்கு நன்மை பெற்றுத்தர அரசாங்கம் எடுக்கக் கூடிய ஒரு வழிமுறை என்பதை எடுத்துக் கூறினேன். 


இரணிலின் நம்பிக்கையில்லாப் பிரேரணை தமிழ் மக்களுக்கு ஏதேனும் நன்மையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அதற்கானவாறு கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமைய வேண்டுமென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments