பேஸ்புக் மூலம் பெருமளவில் நிதி மோசடி! - சுங்க திணைக்களம் எச்சரிக்கை


பேஸ்புக் ஊடாக இலங்கையில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுங்க திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக லொத்தர் சீட்டினால் பல்வேறு பரிசுகள் கிடைத்துள்ளதாக இலங்கையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. அதனையடுத்து அந்த பரிசு பொருட்களை அனுப்புவதற்கு பணம் பெற்று கொள்ளும் மோசடியில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என இலங்கை சுங்க திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலங்களினுள் வெளிநாட்டில் வசிப்பதாக கூறி வெற்றியாளர்களுக்கு கிடைத்துள்ள பரிசினை அனுப்புவதற்கு பாரிய அளவு பணம் மோசடி செய்துள்ள சம்பவங்கள் தொடர்பில் சுங்க பிரிவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல்வேறு குழுக்கள் இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் ஊடாக லொத்தர் பரிசு கிடைத்துள்ளதாக கூறி இலங்கை தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைப்பினை ஏற்படுத்துவர். இந்த பரிசினை விடுவித்து கொள்வதற்காக சுங்க பிரிவிற்கு பணம் செலுத்த வேண்டும் என்று வங்கிக் கணக்கு ஒன்றை வழங்குகின்றனர். இதனால் ஏமாற்றம் அடைந்த பலர் பெருந்தொகை பணத்தை அந்த வங்கிக் கணக்கில் வைப்பு செய்துள்ளனர். இந்த மோசடி நடவடிக்கையின் மூலம் இலங்கையர்கள் பலர் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் 0112 47 14 71 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை சுங்க திணைக்கள விசாரணை பிரிவுக்கு அறிவிக்க முடியும் என சுங்க பிரிவு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

No comments