பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் நாளையுடன் முடிவுக்கு


மாதாந்த நிலுவைக் கொடுப்பனவு உட்பட 6 கோரிக்கைகளை முன்வைத்து, 34 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டத்தை நாளை முடிவுக்குக்கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்விசாரா ஊழியர்கள் போராட்டம் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் மற்றும் ஏனைய சகல நாளாந்த நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நேற்று கொடும்பாவி எரிப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதனிடையே, கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நேற்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

கிழக்குப் பல்கைலக்கழக மட்டக்களப்பு - வந்தாறுமூலை வளாக முன்றலில் நேற்று காலை முதல் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கல்விசாரா ஊழியர்களுக்கும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கபீர் ஹாசிமிற்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

அந்த பேச்சு வார்த்தையினை அடுத்து நாளை முதல் தமது போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே ஊடகங்களுக்குத் தெரிவித்தார்

No comments