கூட்டு நல்லாட்சியை பாதுகாக்க கோரும் யாழ்.ஆயர்!

கூட்டு நல்லாட்சி அரசின் காலம் முடிந்து விடுமோ என்ற ஏக்கம் நம்பிக்கையில்லா பிரேணை தோற்றதோடு முடிவடைந்துள்ளது. தமிழ்க் கட்சிகள் நிலைமையை சாதுரியமாக பயன்படுத்தியுள்ளதாகவும் யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தனது தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளே நம்பிக்கையில்லா பிரேணையை தோற்றுவித்தன. 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இன்று கூட்டு நல்லாட்சி அரசில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகளும் இணைந்து நின்றமையினாலேயே ஆட்சிக்கு வந்தன. அந்த உண்மையை உணராது உள்ளுராட்சித் தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளும் பிரிந்து நின்றமையே கூட்டு நல்லாட்சி அரசிற்கு ஆபத்தானதுடன், எதிரிகளுக்கும் வாய்ப்பானது.


இன்றைய நிலையில் கூட்டு நல்;லாட்சி அரசின் இருப்பு மிக அவசியமானது என்பதை அனைவரும் தெளிவாக உணர வேண்டும். அதனை அடுத்த நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்க வேண்டிய இரண்டு ஆண்டுகளுக்காவது பாதுகாக்க வேண்டும். அது ஜனாதிபதியும் பிரதமரும் வருங்காலத்தில் செயற்படும் புரிந்துணர்விலும், மக்களின் நம்பிக்கையை பெறும் விதத்திலும், தமிழ் அரசியற் கட்சிகளின் நிலைப்பாட்டிலுமே தங்கியுள்ளது.

இலங்கை நாட்டைப் பொறுத்த வரையிலும் இன்னும் குறிப்பாக தமிழ் மக்களை பொறுத்தவரையிலும் கூட்டு நல்லாட்சி அரசின் இருப்பு மிக அவசியமானது. தமிழ் கட்சிகள் தம் அரசியல் வேறுபாடுகளைக் மறந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற ஒன்றிக்க வேண்டுகின்றோம். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தரக் கூடிய யாப்பை திருத்தியமைக்க எடுக்கும் முயற்சியில் கடுமையாக உழைக்க வேண்டுகின்றோம். காணாமற் போனோர் விடயம், அரசியற் கைதிகள் விடுதலை, மீள் குடியேற்றம், வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் போன்ற பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் யாழ் ஆயர் கலாநிதி யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

No comments