புதிய அமைச்சரவை இழுபறியில் – 4 பதில் அமைச்சர்கள் மாத்திரம் நியமனம்


சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள் பதவிகளில் இருந்து விலகியதை அடுத்து, அவர்கள் வகித்து வந்த அமைச்சுப் பொறுப்புகளை, அமைச்சரவையில் உள்ள நான்கு அமைச்சர்களிடம் பகிர்ந்து கொடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர். பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட நான்கு பேரும் நேற்று சிறிலங்கா அதிபர் முன்பாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். சிங்கள- தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் வரை தற்காலிகமாக இவர்கள் இந்த அமைச்சுப் பொறுப்புக்களை கவனிப்பர். இதற்கமைய, கலாநிதி சரத் அமுனுகமவிடம், மேலதிகமாக, சந்திம வீரக்கொடியிடம் இருந்த திறன் விருத்தி, தொழிற்பயிற்சி அமைச்சும், சுசில் பிரேம ஜெயந்தவிடம் இருந்த விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி அமைச்சும் கையளிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம், மேலதிகமாக அனுர பிரியதர்சன யாப்பாவிடம் இருந்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கையளிக்கப்பட்டுள்ளது. தயாசிறி ஜெயசேகரவிடம் இருந்த விளையாட்டுத்துறை அமைச்சு, அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் வழங்கப்பட்டுள்ளது. எஸ்.பி.திசநாயக்கவிடம் இருந்த சமூக வலுவூட்டல், நலன்புரி, மற்றும் கண்டிய பாரம்பரிய அமைச்சும், ஜோன் செனிவிரத்னவிடம் இருந்த தொழில், தொழில் உறவுகள் அமைச்சும், அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

No comments