2 ஆவது நாளாக கொந்தளிக்கும் கடல்…..வீட்டுக்குள் புகுந்த நீர்… அலையில் இழுத்துச் செல்லப்பட்ட படகுகள்


தென்னிந்திய கடல் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டது. குமரி, தனுஷ்கோடியில் கடல் நீர், மணல் பரப்புக்குள் புகுந்தது. இதன்காரணமாக, சுமார் 13,000 நாட்டுபடகுகள் கரை நிறுத்தப்பட்டது. தென் தமிழகம் உட்பட தென்னிந்திய கடல் பகுதிகளில் பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும் எனவும், ஏப்ரல் 21ம் தேதி காலை 8.30 மணி முதல் 22ம் தேதி இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் தங்கள் படகுகளை கடற்கரையின் மிக அருகில் நிறுத்த வேண்டாம் என்றும் இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரித்துள்ளது.
இந்தநிலையில், குமரி மாவட்டத்தில் நேற்று மாலை குளச்சல், மண்டைக்காடு புதூர், கொட்டில்பாடு, உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. கொட்டில்பாடு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 3 வள்ளங்களை கடல் அலை இழுத்து சென்றது. அதில் 2 படகுகள் சேதமடைந்தன. ஒரு படகு பாலத்தின் தூணில் முட்டி நின்றது. குளச்சல் கடற்கரை மணற்பரப்பை தண்ணீர் சூழ்ந்தது. கொட்டில்பாட்டில் ஜெபக்கூடத்தையும் தென்னந்தோப்பையும் கடல் வெள்ளம் சூழ்ந்தது. ஜெபக்கூடம் அருகே இருந்த மீனவரின் வீடு இடிந்தது. இதனால் அந்த குடும்பத்தினர் வேறு இடத்திற்கு சென்றனர். மண்டைக்காடு கிராமத்தில் சுமார் 30 வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. அவர்கள் மேடான பகுதி மற்றும் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர். நேற்று மட்டும் 3000 நாட்டு படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தனுஷ்கோடி, பாம்பன், தங்கச்சிமடம், வடகாடு, ஓலைக்கூடா, சேரன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 3,000 நாட்டுப்படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளன. கடல் சீற்றத்தை தொடர்ந்து தனுஷ்கோடியில் புயலால் அழிந்த கட்டிட பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. இதையடுத்து, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 நாட்டுப்படகுகளும், நெல்லை மாவட்டத்தில் 2,500 படகுகளும் கரை நிறுத்தப்பட்டன. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்: கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் காலை 9 மணியளவில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். குளச்சல் துறைமுக பாலம் பகுதியில் ெபாதுமக்களை செல்லவேண்டாம் மரைன் போலீசார் என்று எச்சரித்தனர். அவர்கள் மணல் பகுதிக்கு செல்லாமல் திரும்பினர். ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு வந்த சுற்றுலா பயணிகள், புதுரோடு பகுதியுடன் திருப்பி அனுப்பப்பட்டனர். இதேபோல், திருச்செந்தூர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரை செல்ல தடைவிதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.
புனித நீராட வந்த பக்தர்களுக்கு தடை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நேற்று காலை 10 மணி வரை பக்தர்கள் வழக்கம்போல் நீராடினர். காலை 10 மணிக்குமேல் நீராட போலீசார் தடை விதித்தனர். இதனால் பக்தர்கள் கடலில் குளிக்காமல் கோயிலில் மட்டும் தீர்த்தமாடி சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் நீராட தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோயில் மற்றும் தனியார் கட்டண குளியலிலும் நீராடி சாமி தரிசனம் செய்தனர்

No comments