வடக்கு மக்களிற்கு சேவையாற்ற 14 கோடி?


வடக்கினில் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மக்களிற்கு சேவையாற்ற(? )வென அவர்களிற்கு ஊக்குவிப்பு வழங்க சுமார் 14 கோடி நிதி தேவையென வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எட்டுகோடியே ஒதுக்கப்பட்டிருந்த போதும் தற்போது போனஸ் ஆசனங்களில் வந்து குதித்தவர்களிற்கு மேலும் ஆறு கோடி தேவையென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் வடமாகாண முதலமைச்சரிற்கு அறிவித்துள்ளார்.

அவ்வகையில் ஒராண்டிற்கு மக்களிற்கு சேவையாற்றவுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கென 14  கோடி ஒதுக்கீடு தேவையென முதலமைச்சரிற்கு அறிக்கையிட்டுள்ளார்.

தற்போதைய அரச சுற்றுநிரூப படி யாழ்.மாநகர முதல்வரிற்கு 30 ஆயிரமும்,பிரதிமுதல்வரிற்கு 25 ஆயிரமும் ஏனைய உறுப்பினர்களிற்கு 20ஆயிரமும் ஊக்குவிப்பு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை நகரசபை மற்றும் பிரதேசசபைகளது தவிசாளர்களிற்கு 25ஆயிரமும் பிரதி தவிசாளர்களிற்கு 20ஆயிரமும் உறுப்பினர்களிற்கு தலா 15ஆயிரமும் ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

வடக்கினில் ஒட்டுமொத்தமாக தெரிவாகியுள்ள 1124 உறுப்பினர்களும் ஊக்குவிப்பு கொடுப்பனவை பெறவுள்ளனர்.

இதனிடையே தொலைபேசி,தபால் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய படிகளை பெற தமது உள்ளுராட்சி சபைகளது வரிகளிலேயே அவர்கள் கைவைக்கவேண்டியிருக்குமென சொல்லப்படுகின்றது.

வடமாகாணசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தற்போது இரண்டு இலட்சத்திற்கும் குறையாத வருமானத்தை ஈட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

No comments